Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 11 மே (ஹி.ச.)
இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினர் மீது நடைபெறும் சாதி அடிப்படையிலான வன்முறை, அவமதிப்பு, சமூக ஒதுக்கல், நில அபகரிப்பு போன்ற வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, பொதுவாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சமத்துவத்தை உறுதி செய்தாலும் நடைமுறையில் பல இடங்களில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சட்டத்தில் கடந்த 2015, 2018-ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு மேலும் கடுமையாக்கப்பட்டன. இதன்படி, தாக்குதல், கொலை செய்தல், பாலியல் வன்முறை, வீட்டிற்குத் தீ வைத்தல், அச்சுறுத்துதல் போன்றவை கடுமையான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை, பாதுகாப்பு, மறுவாழ்வு உதவிகள், அரசு வேலை, கல்வி உதவி போன்றவற்றை வழங்க இச்சட்டம் உறுதியளிக்கிறது.
குடும்பத்தில் ஊதியம் ஈட்டும் நபர் படுகொலை செய்யப்பட்டால் குறைந்தபட்சமாக ரூ.5 லட்சமும், குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு முழுவதும் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் குடும்ப ஓய்வூதியத்தொகை வழங்கப்படவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் த.கருப்பையா வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து மதுரையில் அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள், சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டால், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 2015-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கில் படுகொலை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சட்ட விதிமுறைகளின்படி மாநில அரசு, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக, படுகொலைக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குடும்ப வருமானம் மற்றும் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இதில் பல்வேறு முரண்பாடுகள் இருந்த சூழ்நிலையில், தலித் விடுதலை இயக்கம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு, அக்குறிப்பிட்ட ஓய்வூதியத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மாதம் ரூ.17,650-ஆக அரசாணை வெளியிட வைத்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் வன்கொடுமை காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் ரூ.17,750 வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட 843 குடும்பங்கள், இக்குடும்ப ஓய்வூதியத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 3 மாதங்களாக பெறவில்லை. இதனை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. தற்போது மே மாதமும் தொடங்கிவிட்டது. பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க வேண்டிய அவசியம், மாநில அரசுக்கோ அல்லது ஆதிதிராவிடர் நலத்துறைக்கும் இல்லை.
எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய ரூ.4.58 கோடி நிறுத்தி வைக்கும் மாநில அரசையும், ஆதிதிராவிடர் நலத்துறையையும், அரசு செயலாளர், இயக்குநர் ஆகியோரை வன்மையாக கண்டிக்கிறோம்.
மே மாதம் வழங்கப்பட உள்ள குடும்ப ஓய்வூதியத்திற்கு முன்பாகவே ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து அரசு வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொண்ட அரசு செயலாளர் மற்றும் இயக்குநர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளருக்கும் மனு கொடுத்துள்ளோம்.
இனி வருங்காலத்தில் இந்த குடும்ப ஓய்வூதியத்தை எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு நிறுத்தி வைக்கக்கூடாது எனவும் வேண்டுகோள் வைக்கிறோம்' என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN