Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 மே (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னம்பாறையைச் சேர்ந்த தமிழரசன் (22) என்பவர் மீது திருட்டு மற்றும் அடிதடி தொடர்பான வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வழக்குகள் தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள கைதி அறையில் அடைத்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் போலீசார் ஓய்வில் இருந்தபோது, தமிழரசன் கைதி அறையில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இன்று காலை கைதி அறையை பரிசோதித்தபோது அவர் இல்லாதது தெரியவந்ததைத் தொடர்ந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் தனிப்படைகள் அமைத்து தமிழரசனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காவல் நிலையத்திலேயே விசாரணை கைதி தப்பி ஓடிய இந்த சம்பவம் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கைதி எவ்வாறு தப்பினார், பாதுகாப்பில் அலட்சியம் ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN