Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மே (ஹி.ச.)
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், 2026-2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரவேற்றுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்நிறுவனம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைக்கு திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இயக்குநர்களை உருவாக்கி வரும் தனித்துவமான கல்வி நிறுவனமாக திகழ்கிறது. மேலும், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, “இளங்கலை காட்சிக்கலை” (Bachelor of Visual Arts) என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2026-2027 கல்வியாண்டில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது:
ஒளிப்பதிவு
எண்மிய இடைநிலை
ஒலிப்பதிவு
இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்
படத்தொகுப்பு
உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்
பாடப்பிரிவுகளில் கலை ஆர்வம் கொண்ட மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு 12.05.2026 காலை 10 மணி முதல் தொடங்குகிறது. மாணவர்கள் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படப் பயிற்சி நிறுவனம் இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, கட்டணத்தை செலுத்தி பதிவு செய்யலாம்.
மேலும், தேவையான அனைத்து ஆவணங்களையும் 02.06.2026 மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ