Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 11 மே (ஹி.ச.)
கிருஷ்ணகிரி அருகே சாலையோரத்தில் அரை கிலோ மீட்டர் இடைவெளியில் 2 வாலிபர்களின் உடல்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர் பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவரின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. உடலில் பெட்ஷீட் உள்ளிட்ட பொருட்கள் சுற்றப்பட்டு, தென்னை ஓலைகள் வைத்து பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதே சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெப்பாலம்பட்டி பகுதியில் மேலும் ஒரு வாலிபரின் உடலும் இதே பாணியில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கருகிய நிலையில் சடலங்கள் கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, வேறு இடத்தில் கொலை செய்து உடல்களை கொண்டு வந்து எரித்தார்களா?, அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்ற நிலையில், இன்று காலை சட்டசபை கூடவுள்ள சூழலில் ஒரே பாணியில் 2 வாலிபர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam