Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 11 மே (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி அடுத்த மத்ரூட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). இவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். குடும்பத்தினருடன் வசித்து வந்த ராஜேந்திரனுக்கும், அவரது சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலப் பிரச்சினை காரணமாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் உறவினர்களுக்குள் கடும் விரோதம் நிலவி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இன்று ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவரது சித்தப்பா குடும்பத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற இளைஞர் காரை வேகமாக ஓட்டி வந்து ராஜேந்திரன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரை ஏற்றி கொலை செய்ததாக கூறப்படும் ஜெகதீசன், சம்பவத்துக்குப் பிறகு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்களபுரம் போலீசார், ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஜெகதீசனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நிலத் தகராறு காரணமாக உறவினரே காரை ஏற்றி கொலை செய்த இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN