Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 11 மே (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 6 சென்ட் நிலத் தகராறில் ஏற்பட்ட மோதலில், அண்ணன் மகனை காரை ஏற்றி கொலை செய்ததாக சித்தப்பா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அடுத்த திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பூசாலியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). விவசாயியான இவர், மனைவி புவனேஸ்வரி மற்றும் 3 வயது குழந்தையுடன் வசித்து வந்தார்.
இவருக்கும், ராசிபுரம் நீதிமன்றத்தில் அமீனாவாக பணியாற்றும் அவரது சித்தப்பா வெங்கடாசலம் (55), மேலும் அவரது மகன்கள் கார்த்தி, ஜெகதீஷ் ஆகியோருக்கும் 6 சென்ட் நிலம் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் மங்களபுரம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்த நிலையில், போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பியதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை, வெங்கடாசலம் தனது மகன்களுடன் காரில் சென்றபோது, குடிபோதையில் இருந்த ராஜேந்திரன் காரை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடாசலம், காரை வேகமாக ஓட்டி ராஜேந்திரன் மீது ஏற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், ராஜேந்திரன் இறந்துவிட்டாரா என்பதை பார்க்க இரும்பு ராடுடன் வந்து, குடும்பத்தினரையும் மிரட்டியதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றம்சாட்டினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் ராஜேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விபத்து வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்கடாசலம் மற்றும் அவரது மகன்கள் கார்த்தி, ஜெகதீஷ் ஆகிய மூவரையும் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என ராஜேந்திரனின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam