Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 மே (ஹி.ச.)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே காட்டம்பட்டி வாய்க்கால் மேடு பவர் ஹவுஸ் பகுதியில் இன்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டது.
பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த லாரியும், பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கணவன், மனைவி, 17 வயது இளம் பெண், 12 வயது சிறுவன் மற்றும் 23 வயது பெண் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சிக்கினர்.
தகவலறிந்து அப்பகுதி பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சேலம் மாவட்டம் காடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனபால், அவரது மனைவி மேனகா, மகள் அனுஷ்கா (17), உறவினர் மகள் சினேகா (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
படுகாயமடைந்த 12 வயது சிறுவன் சுர்ஜித் ஆம்புலன்ஸ் மூலம் முதலில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து நெகமம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த இந்த சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam