திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களிடம் நூதன திருட்டு – பிடிபட்டவர் மீது நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
தூத்துக்குடி, 11 மே (ஹி.ச.) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பதாக கூறி செல்போன் திருடிய கும்பல் குறித்து பக்தர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் சிறுவரை
திருட்டு


தூத்துக்குடி, 11 மே (ஹி.ச.)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பதாக கூறி செல்போன் திருடிய கும்பல் குறித்து பக்தர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் சிறுவரை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாதேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 7-ஆம் தேதி கோவிலுக்கு வந்திருந்தார்.

அப்போது ராஜகோபுரம் எதிரே உள்ள கண்டெய்னர் பாக்ஸ் அருகே சிறுவர்கள் உட்பட சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பக்தர்களுக்கு “வேல் பொட்டு” வைத்து வந்துள்ளனர்.

அவர்கள் பக்தர்களிடம் உடைமைகளை பாதுகாப்பதாக கூறி ரூ.30 பெற்றுக்கொண்டு பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். கோவிலில் அதிகாரப்பூர்வமாக உடைமைகள் பாதுகாக்க தனியறை இருந்தபோதிலும், விவரம் தெரியாத பக்தர்களிடம் இதுவே கோவில் சார்ந்த பாதுகாப்பு மையம் என கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

கோவிலில் சாமி தரிசனம் முடித்து திரும்பிய மாதேஷ், தனது உடைமைகளில் செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உடைமைகளை பெற்றுக்கொண்ட சிறுவரும் அங்கிருந்து மாயமாகியிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் செல்போனின் பில் கேட்டதால், அதனை மறுநாள் வழங்கியதாகவும், திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிறுவரையும் பிடித்து ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பக்தர்களின் உடைமைகள் அடிக்கடி திருடப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கார்களில் வைக்கப்பட்ட பொருட்கள், கடற்கரையில் குளிக்கச் செல்லும் பக்தர்களின் உடைமைகள் உள்ளிட்டவை நூதன முறையில் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

வெளி மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என சுமார் 100 பேர் கோவில் வளாகத்தில் “வேல் பொட்டு” வைத்து பணம் வசூலித்து வருவதாகவும், அவர்களில் சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் ஏற்கனவே பல புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி, பக்தர்களை குறிவைத்து செயல்படும் கும்பல்களை கட்டுப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam