Enter your Email Address to subscribe to our newsletters

இராமநாதபுரம், 11 மே (ஹி.ச)
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா நாயகத்தின் 852 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அந்த வகையில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று மதியம் முதல் (மே 10) கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
சூபி துறவி சுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா நாயகத்தின் நினைவாக நடத்தப்படும் இந்த கந்தூரி விழாவில், சந்தனக்கூடு ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
மணம் வீசும் சந்தனம் பூசப்பட்ட கூடு, மேளதாளங்கள் முழங்க, யானை மீது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தர்ஹாவை வந்தடைந்தது. சந்தனக்கூடு தர்ஹாவை மூன்று முறை வலம் வந்த பின்பு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண போர்வைகளால் போற்றப்பட்டு மல்லிகை பூ சரங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது.
இந்த சிறப்பு வாய்ந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, அனைத்து மதத்தினரும் இந்த விழாவில் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்துகள், குடிநீர், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஏர்வாடி தர்ஹா கந்தூரி விழா, சுமார் 850 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விழாவாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மே 18 மாலை கொடியிறக்கப்பட்டு சந்தனக்கூடு திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் வரும் இன்று(மே 11) உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளது.
Hindusthan Samachar / vidya.b