Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மே (ஹி.ச.)
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது. இதில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
முன்னதாக, சோழவந்தான் தொகுதி தவெக உறுப்பினர் எம்.வி. கருப்பையா தற்காலிக பேரவைத் தலைவராக நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.
அவருக்கு நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று காலை சரியாக 9:30 மணிக்குத் தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் அவை கூடியது.
தற்காலிக பேரவைத் தலைவரின் உரைக்குப் பிறகு, பதவிப் பிரமாண நிகழ்வு தொடங்கியது. முதலாவதாக, அவை முன்னவரும் முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் எம்.எல்.ஏ-வாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் வரிசையாக வந்து பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில், சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்துடன் செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்ட சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் முன்பு அ.தி.மு.க.வில் பயணித்தவர். ஜெயலலிதாவின் விசுவாசியான இவர் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார்.
த.வெ.க.வில் தற்போது அமைச்சராகியபோதும், ஜெயலலிதா மீதான பாசம் அவருக்கு இன்னும் குறையவில்லை. இதனை பிரதிபலிக்கும் வகையில் இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றபோது அவரது சட்டைபையில் ஜெயலலிதா படத்தை வைத்துள்ளார்.
நேற்று அமைச்சராக பதவியேற்றபோதும் செங்கோட்டையன் ஜெயலலிதா படத்தை வைத்திருந்தார்.தவெகவில் இணைந்த பிறகும் செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்தையே வைத்திருக்கிறார்.
இது குறித்து ஏற்கனவே செய்தியாளர்களிடம் விளக்கிய செங்கோட்டையன் இதற்கு விஜய்யும் அனுமதி வழங்கியதாகவும் வேறெந்த தலைவரும் இவ்வாறு அனுமதி வாங்கமாட்டார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதேநேரத்தில் அண்மையில் திமுகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது சட்டைப்பையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b