அதிமுக பிரமுகரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிய சம்பவம்
திருவள்ளூர், 11 மே (ஹி.ச.) திருவள்ளூர் நகராட்சி, 7 ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோன் பாஷா. இவர் அதிமுக 7 ஆவது வார்டு பிரதிநிதியாக உள்ளார். இவர் பழைய வீடுகளை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார். இவருடைய பழைய பொருட்கள் விற்பனை நிலையம் தி
Tiruvallur


திருவள்ளூர், 11 மே (ஹி.ச.)

திருவள்ளூர் நகராட்சி, 7 ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோன் பாஷா. இவர் அதிமுக 7 ஆவது வார்டு பிரதிநிதியாக உள்ளார்.

இவர் பழைய வீடுகளை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார். இவருடைய பழைய பொருட்கள் விற்பனை நிலையம் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் உள்ளது.

இந்நிலையில், பழைய பொருட்களை வாங்குவது தொடர்பாக ஆரோன் பாஷாவை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் சிலர், இதுசம்பந்தமாக நேரில் வருவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, விற்பனை நிலையத்தை பார்ப்பதுபோல் வந்த அவர்கள், ஆரோன் பாஷாவிடம் உண்மையான வாடிக்கையாளர்களை போல நாடகமாடி பொருட்களின் விலை குறித்து விசாரித்துள்ளனர்.

இதை நம்பி அவரும் வியாபாரத்தில் முழு கவனம் செலுத்தியுள்ளார். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய அந்த மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஆரோன் பாஷாவை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

இதில் ஆரோன் பாஷா-வின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஆட்டோ மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஆரோன் பாஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆகையால், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புள்ளரம்பாக்கம் காவல் நிலைய போலீஸார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், திருவள்ளூர் நகரப் பகுதியில் தொழில் ரீதியாகவும், அதேபோல் மசூதி விவகாரம் ஒன்றிலும் அவருக்கு பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்தது. ஆனால் எதற்காக இந்த கொலை முயற்சி நடைபெற்றது என தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN