Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 மே (ஹி.ச.)
த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய் நேற்று தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி கலந்து கொண்டார்.
பதவியேற்பு விழா மேடையில் முதல்வர் விஜய்க்கு அருகே ராகுல் காந்தி அமர்ந்திருந்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
இது தொடர்பான காணொளிகளை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவியேற்றியிருந்தார்.
அந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான வீயூஸ்களையும், லைக்ஸ்களையும் பெற்று வைரல் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் விஜயுடன் இருந்த அந்த காணொளிகள் காட்சிகள் ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியதாவது,
டிவிகே காங்கிரஸ் கூட்டணிக்கு மோடி அவ்வளவு பயப்படுகிறாரா, அதனால்தான் பதவியேற்பு வீடியோக்கள் கூட தடுக்கப்படுகின்றனவா?
பதவியேற்பு விழாவில் தளபதி விஜய்யுடன் எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி இடம்பெற்றிருந்த ரீல் மற்றும் புகைப்படப் பதிவை இன்ஸ்டாகிராம் முடக்கியது. இந்த பொது ஜனநாயக நிகழ்வு குறித்த எனது அதே பதிவும் நீக்கப்பட்டது.
சட்டப்பூர்வ தேவைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பே, அந்த ரீல் ஒரு மணி நேரத்திற்குள் 1.2 கோடி பார்வைகளைக் கடந்திருந்தது, அதே நேரத்தில் அந்தப் புகைப்படப் பதிவு ஏற்கனவே கிட்டத்தட்ட 4.6 கோடி மக்களைச் சென்றடைந்திருந்தது.
ஒரு அரசியலமைப்பு பதவியேற்பு விழாவின் காட்சிகளில் அப்படி என்ன ஆபத்து இருக்கிறது?
இது, டிஜிட்டல் தளத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் மீது செய்யப்படும் பாரபட்சமான தணிக்கை மற்றும் ஒடுக்குமுறை குறித்த கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய தகவல் தொழில்நுட்ப துறைக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் இன்ஸ்டாகிராம் தளத்தின் உள் அமைப்பு தவறுதலாக அந்த பதிவை கண்டறிந்து முடக்கியுள்ளதாகவும், அது இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த தொழில்நுட்ப பிழை சரி செய்யப்பட்டு முடக்கப்பட்ட வீடியோ மீண்டும் ராகுல் காந்தியின் பக்கத்தில் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b