717 டாஸ்மாக் கடைகள் மூடல் வரவேற்கத்தக்கது ,மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
சென்னை, 12 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவி
Anbumani


CM Vijay Sign


சென்னை, 12 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இது முழுமதுவிலக்கை நோக்கிய தமிழ்நாட்டின் பயணத்திற்கு நம்பிக்கையூட்டும் தொடக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 276 கடைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுக்கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 4765-லிருந்து 4048 ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மக்கள் நலனை பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழுமதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் மது போதையில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் மூலம் பாதியாக குறைக்க பா.ம.க. முக்கிய பங்கு வகித்ததாகவும், தற்போதைய நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியிலேயே மதுக்கடைகளை கடக்க வேண்டிய நிலை இருப்பதால், இளம் தலைமுறையினர் எளிதில் மதுவுக்கு அடிமையாகும் சூழல் உருவாகியுள்ளதாகவும், தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அதனை கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என குறிப்பிட்டுள்ள அவர், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் சட்டவிரோத “சந்துக் கடைகள்” மற்றும் “மனமகிழ் மன்றங்கள்” மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க வட்ட மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்றும், மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் கள்ளச்சாராயம் பரவாமல் தடுக்க அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மது மற்றும் போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும் என்றும், அந்த இலக்கை நோக்கி அரசு தொடர்ந்து செயல்பட்டால் அதற்கு பா.ம.க. முழு ஆதரவு வழங்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ