Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச)
மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு (NEET UG 2026) கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. எனினும், தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வினாத்தாள் கசிந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
இந்த ஆண்டும் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முறைகேடுகள் வெளிவந்து, தேர்வு ரத்து ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல மோசடி இல்ல, நீட்டே ஒரு மோசடி -தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் தாமதம், மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b