Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் இன்று தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
பின்னர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவை உறுப்பினர்கள் சபநாயகர், துணை சபாநாயகருக்கான வாழ்த்துரைகளை வழங்கினர்.
சபாநாயகரை வாழ்த்தி முதல்வர் விஜய் பேசியதாவது:
மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி என்றார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன். அதிமகான மக்கள் அதிக நன்மைகளை இந்த ஆட்சிகாலத்தில் பெற்றுள்ளார்கள் என்னும் அளவுக்கு நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும் .
சட்டப்பேரவையில் அனைவரும் சமம். ஒரு கட்சியில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் இருந்தாலும், அவர் மக்களின் பிரதிநிதி.
அவரது கருத்துக்கும், அவர் முன்வைக்கும் கோரிக்கைக்கும் முழு மதிப்பளிக்கப்படும். இது எனது ஆட்சியின் அடிப்படை ஜனநாயகக் கொள்கை.
கொள்கை விவாதங்கள், சட்டமுன்வடிவுகள் மீதான விவாதங்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் உள்ளிட்ட அனைத்து அவை நடவடிக்கைகளிலும் சிறிய கட்சிகள் மற்றும் பெரிய கட்சிகளின் கருத்துகள் சமமான முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ளப்படும்.
சட்டப்பேரவை என்பது முதலமைச்சருக்கான அரங்கம் மட்டுமல்ல. அது 8 கோடி தமிழர்களின் பிரதிநிதிகள் அமரும் புனித அவை. இங்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைவரும் முதல்வருக்கு நிகரானவர்கள்.
அதற்குரிய வகையில் இப்பேரவையை நடத்திச் செல்லக்கூடியவரையே தமிழக வெற்றிக் கழகம் முன்மொழிந்துள்ளது. பேரவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை பேரவை முன்னவரும், எதிர்கட்சி தலைவரும் தங்கள் கரங்களை பிடித்து இருக்கையில் அமரவைத்தனர்.
இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்றால், இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறைகளை போன்றது நம்முடைய நடைமுறையும். மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்கு நாடாளுமன்றம் இருந்துள்ளது. அங்கு மன்னர் ஒரு விஷயம் செய்ய விரும்புவார்.
ஆனால் அதை நாடாளுமன்றம் பெரும்பாலும் நிராகரித்து விடும். அதை மன்னரிடம் தெரியப்படுத்துபவரே நாடாளுமன்ற சபாநாயகர். அதற்கு மிகுந்த துணிவு வேண்டும். மன்னருக்கு சில பணிகளை செய்வதற்குதான் நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும்.
தான் நிறைவேற்றியதை நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது என்று சொல்லும் சபாநாயகருக்கு மரண தண்டனை விதிக்குமாறு கூட மன்னர் ஆணையிடுவார். அதனால் இந்த சபாநாயகர் பதவிக்கு யாரும் வரமாட்டார்கள்.
எனவே புதிய நாடாளுமன்றம் அமையும்போது சபாநாயகர் பதவிக்கு ஒருவரை அறிவிக்கும்போது அவர் தலை தப்பித்தால் போதும் என்று ஓடிவிடுவார். அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் அவர் கையைப் பிடித்து இழுத்துவந்து ஆசனத்தில் அமரவைப்பார்கள்.
இதுதான் அந்தக் காலத்தில் இருந்த மரபு. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இம்மரபு தொடர்கிறது.
நிச்சயமாக தவெக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள் என்று வாக்குறுதி அளிக்க விரும்புகிறேன்
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b