கரியால லிங்கோஸ்வர கோவில் காளை உயிரிழப்பு - ஊர்வலமாக கொண்டு சென்று பூஜைகளுடன் வழிபாடு
கிருஷ்ணகிரி, 12 மே (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தெட்டபேளூர் கிராமத்தில் அமைந்துள்ள கரிகால லிங்கேஸ்வரர் கோவிலில் தெய்வமாக வழிபட்டு வந்த காளைமாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரும்பர் சமூ
Bull


கிருஷ்ணகிரி, 12 மே (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தெட்டபேளூர் கிராமத்தில் அமைந்துள்ள கரிகால லிங்கேஸ்வரர் கோவிலில் தெய்வமாக வழிபட்டு வந்த காளைமாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரும்பர் சமூக மக்களின் குலதெய்வக் கோவிலாக விளங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தில், கடந்த 20 ஆண்டுகளாக ஒரு காளைமாடு சிறப்பு பராமரிப்புடன் வளர்க்கப்பட்டு வந்தது.

இந்த காளை, கோவிலின் புனித அடையாளமாக கருதப்பட்டு, பக்தர்களால் தெய்வமாக மதித்து வழிபடப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒசபுரம் கிராமத்தில் இருந்தபோது வயது முதிர்வு காரணமாக அந்த காளை இன்று உயிரிழந்தது.

இந்த தகவல் பரவியதும் தெட்டபேளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சோகத்தில் மூழ்கினர்.

பின்னர், காளைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் காளையின் உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தின் போது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். பலர் காளையின் உடலுக்கு மலர் தூவி வழிபட்டனர்.

மாலை நேரத்தில் கோவில் மரபுப்படி இறுதி சடங்குகள் நடைபெற்று, காளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

20 ஆண்டுகளாக கோவிலின் ஒரு அங்கமாக இருந்து பக்தர்களின் பக்திப் பூர்வமான வழிபாட்டைப் பெற்ற காளை உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தையும் ஆன்மிக உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN