717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு - முதல்வர் விஜய்க்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்பு
சென்னை, 12 மே (ஹி.ச) தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளில், புதிய அரசு வழிபாட்டு தளங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் அமைந்துள்ள 717 கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட தமிழ்நாடு முதலம
Tasmac Protest


சென்னை, 12 மே (ஹி.ச)

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளில், புதிய அரசு வழிபாட்டு தளங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் அமைந்துள்ள 717 கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருப்பதை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி) வரவேற்றுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் த. தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் சுமார் 4,827 மதுபான கடைகளில் விதிமுறைகளுக்கு உட்படாமல் இயங்கி வரும் 717 கடைகளை மூட அரசின் நடவடிக்கை சமூக நலன் கருதிய முக்கிய முடிவாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கைக்காக முதலமைச்சர் விஜய்க்கு சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

அதேவேளை, மூடப்பட உள்ள கடைகளில் பணியாற்றி வரும் சுமார் 1,000 பணியாளர்களின் எதிர்காலம் குறித்து அரசின் கவனம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலர் கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருவதால், கடைகள் மூடப்பட்ட பின்னர் அவர்களுக்கு பணியிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, பணிநீக்கம் ஏற்படாத வகையில், பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் மாற்றுப் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ