Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 மே (ஹி.ச)
மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக இதுவரை ரூ.6 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
2005 நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த உதவித்திட்டத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் ரூ.5 கோடியை வைப்பு நிதியாக வழங்கியிருந்தார். அந்த தொகையின் வட்டியை பயன்படுத்தி மாதந்தோறும் ஏழை, எளிய மற்றும் நலிந்தோருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பின்னர், 2007 ஜனவரி மாதம் நடைபெற்ற 30வது புத்தகக் கண்காட்சியில் பேசிய கலைஞர் கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.
அதன்படி ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மீதமுள்ள ரூ.4 கோடி வைப்பு நிதியின் வட்டியை கொண்டு 2007 பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் திட்டத்தின் கீழ், 2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. பின்னர் 2013 ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த மாத நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை, 11-05-2026 அன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நிதி பெறுநர்கள் பயணச் செலவினத்தை தவிர்க்கும் வகையில், உதவித் தொகை வரைவுக் காசோலைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ