Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 மே (ஹி.ச.)
குடும்பத்தின் ஆண்டு வருமானம் 10 லட்ச ரூபாயை மீறும் குடும்பங்களுக்கு LPG கேஸ் மானியம் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், LPG பயனாளர்களின் தரவுகளை வருமான வரித்துறை பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பு பணிகளை தொடங்கியுள்ளன.
இதன்படி, கேஸ் இணைப்பு பெற்ற நுகர்வோர் அல்லது அவர்களின் கணவர், மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் மொத்த ஆண்டு வரிக்குட்பட்ட வருமானம் ரூ.10 லட்சத்தை கடந்தால், LPG மானியம் பெறும் தகுதி ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து சந்தேகத்திற்கிடமான கணக்குகளுக்கு SMS மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருவதாகவும், 7 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்காதவர்களின் மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வருமான அடிப்படையில் மானியம் பெறுவோர் மற்றும் மானியம் பெறாதோர் என பிரித்து, “subsidy” மற்றும் “non-subsidy” slab முறையில் கேஸ் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளதாகவும், அது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இண்டன் உள்ளிட்ட கேஸ் சேவை நிறுவனங்களின் இணையதளங்களில், அதிக வருமானம் உள்ள வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்து LPG மானியத்தை திருப்பி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P