பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான ஆய்வு - மதுரை ஆட்சியர் பிரவீன் குமார்
மதுரை, 12 மே (ஹி.ச.) மதுரையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி வாகனங்களுக்கான விரிவான ஆய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்குமார் தெரிவித்தார். மதுரையில் உள்ள 233 பள்ளிகளுக்குச் சொந்தமான ம
Madurai Collector Praveen Kumar


மதுரை, 12 மே (ஹி.ச.)

மதுரையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி வாகனங்களுக்கான விரிவான ஆய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்குமார் தெரிவித்தார்.

மதுரையில் உள்ள 233 பள்ளிகளுக்குச் சொந்தமான மொத்தம் 1,316 பள்ளி வாகனங்கள் இந்த ஆண்டுக்கான கூட்டாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து சென்று மீண்டும் வீடு திரும்பச் செய்வது பள்ளி நிர்வாகத்திற்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் மிக முக்கியமான பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

அரசாணை விதிமுறைகளின்படி, போக்குவரத்துத் துறை, போக்குவரத்து காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து ஒவ்வொரு பள்ளி வாகனத்தையும் ஆய்வு செய்து வருகின்றன. இதுவரை 306 வாகனங்கள் நேரில் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வாகனங்களின் ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் 17 முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. முதலுதவி பெட்டி மற்றும் அதன் பயன்பாடு, அவசரகால வெளியேறும் வழி, தீயணைப்பு கருவிகள், மாணவர்களின் புத்தகப் பைகளை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா, வாகனத்தின் பொது பாதுகாப்பு நிலை ஆகியவை விரிவாக பரிசோதிக்கப்படுகின்றன.

பள்ளி வாகனங்களில் அவசரகால கதவுகள் எப்போதும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் என்றும், தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆட்சியர் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்படும் பள்ளி வாகன ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பள்ளி வாகன ஓட்டுநர் விருது வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஓட்டுநரின் நேர்த்தியான வருகை, மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளி நிர்வாகத்தின் சான்று மற்றும் வாகனத்தின் பராமரிப்பு நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்படும்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் பள்ளி வாகனங்களில் எவ்வாறு பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பது குறித்து போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பாக ஓட்டுநர்கள், உதவியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தனிப்பட்ட பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பள்ளி வாகனங்களில் பழுது அல்லது பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தாலும், அதை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்க தயக்கம் உள்ளவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தனி புகார் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதில் வரும் புகார்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார்.

இதனுடன், மதுரையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வேன்கள் மற்றும் பகிர்வு ஆட்டோக்களுக்கும் விரைவில் தனித்தனி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்குமார் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN