புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி- 10 மாவட்டங்களில் 2 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு
சென்னை, 12 மே (ஹி.ச.) வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரிக்க உள்ளது. வரும் மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை
மழை


சென்னை, 12 மே (ஹி.ச.)

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரிக்க உள்ளது. வரும் மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி,

வடக்கு இலங்கை கடற்கரையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதனிடையே, லட்சத்தீவு முதல் தென்தமிழகம் வரை வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது.

இதன் தாக்கத்தால், மே 12 முதல் 14 வரை டெல்டா மாவட்டங்கள், தென்தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, மே 15 மற்றும் 16-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மேற்கு மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நகரின் வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரையில் இருக்கும். கடந்த 24 மணி நேர நிலவரப்படி, அதிராமப்பட்டினத்தில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P