நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, 12 மே (ஹி.ச.) அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வினாக்கள் தேர்வுக்கு பல நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ர
NEET question paper leak – Anbumani Ramadoss urges.


சென்னை, 12 மே (ஹி.ச.)

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வினாக்கள் தேர்வுக்கு பல நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2026-27 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் “உத்தேச வினாக்கள் தொகுப்பு” என்ற பெயரில் 410 வினாக்கள் அடங்கிய கையெழுத்து ஆவணம் தேர்வுக்கு 15 முதல் 30 நாட்களுக்கு முன்பே மாணவர்களிடம் பரவியதாகவும், தேர்வுக்கு 42 மணி நேரத்திற்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் ராஜஸ்தான் மற்றும் வடமாநிலங்களில் வேகமாக பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த வினாக்களை மட்டும் படித்திருந்தாலே நீட் தேர்வில் 720 மதிப்பெண்களில் குறைந்தது 600 மதிப்பெண்கள் பெற முடியும் என ராஜஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 13 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, மதிப்பீட்டு குளறுபடிகள், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை இதுவரை திருப்திகரமான விளக்கம் அளிக்கவில்லை .

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் மருத்துவ இடங்களுக்கு 20 முதல் 22 லட்சம் மாணவர்கள் போட்டியிடும் நிலையில், நீட் தேர்வில் தொடர்ந்து எழும் முறைகேடு குற்றச்சாட்டுகள் மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடாக ஊக்குவிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு மையங்களில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் சோதனை என்ற பெயரில் அவதிப்படுகின்றனர். இத்தகைய கடுமையான சோதனைகள் நடத்தும் தேசிய தேர்வு முகமையால் வினாத்தாள்களை பாதுகாக்க முடியவில்லையா?

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் விற்பனையை தடுக்கவும் நீட் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த 9 ஆண்டுகளில் அந்த நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை.

மேலும், நீட் பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம் ஈட்டும் வணிகமாக மாறிவிட்டது. இதனால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகி வருகின்றது. நீட் அச்சத்தால் மாணவர் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றது.

எனவே, யாருக்கும் பயனளிக்காத நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்

என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b