ரூ.15 கோடி முதலீட்டு மோசடி- தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நாக்பூரில் கைது
சென்னை, 12 மே (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரை சேர்ந்த ராஜாராமின் மகன் சரவணன் (31), தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வந்துள்ளார். இவர் பலரிடம் அதிக லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக கு
Nag


சென்னை, 12 மே (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரை சேர்ந்த ராஜாராமின் மகன் சரவணன் (31), தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

இவர் பலரிடம் அதிக லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் கூடுதலாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை லாபமாக வழங்கப்படும் என்றும், பெங்களூருவில் தங்க முதலீட்டில் பணம் செலுத்தி அதன் மூலம் வருமானம் கிடைப்பதாகவும் கூறி பலரை நம்ப வைத்துள்ளார்.

இதனை நம்பி பலர் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பலரிடமிருந்து சுமார் ரூ.15 கோடி வரை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் சிலருக்கு வட்டி வழங்கியதாக கூறப்படும் நிலையில், பின்னர் பணம் மற்றும் வட்டியை திருப்பி வழங்காமல் சரவணன் சாக்குபோக்கு கூறி வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், சரவணன் புதுக்கோட்டையை விட்டு வெளியேறி தலைமறைவானார். பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சரவணனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சரவணன் நேற்று புதுக்கோட்டைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், அவரது திருவப்பூர் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கு பணமோ, நகையோ எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த மோசடியில் மேலும் யாரேனும் தொடர்புடையவர்களா, மோசடி செய்யப்பட்ட பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது, எந்த வகையில் இவ்வளவு பெரிய அளவில் மோசடி நடைபெற்றது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ