Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 மே (ஹி.ச.)
இந்தியா முழுவதும் கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் (NEET) தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்த சூழலில், வினாத்தாள் கசிந்ததாக புகார் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு தொடங்குவதற்கு முன்னரே வினாத்தாள் சமூக வலைதளங்களிலும், சில குறிப்பிட்ட நபர்களிடமும் கசிந்ததாகப் புகார்கள் எழுந்தன.
தொடக்கத்தில் இதனை மறுத்த நிர்வாகம், பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வினாத்தாள் கசிந்தது உண்மைதான் என்பதை உறுதி செய்தது. தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது.
இதனையடுத்து, மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு செல்லாது என்றும், தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் தேசிய தேர்வு முகமை திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மறுதேர்வு நடத்துவது குறித்து விரைவில் புதிய அட்டவணை வெளியிடப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P