விஜய் முதலமைச்சராக வேண்டும் என தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
திருநெல்வேலி, 12 மே (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகே உள்ள புதுமனை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். சுமார் 45 வயதான அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைக் கழக செயலாளராக இருந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கட்சித்
Isakkiappan


திருநெல்வேலி, 12 மே (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகே உள்ள புதுமனை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். சுமார் 45 வயதான அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைக் கழக செயலாளராக இருந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

கட்சித் தலைவர் விஜயின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பற்றால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதலுடன் 16 அடி நீளமான வேல் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியிருந்தார்.

இந்த சம்பவம் அப்போது கட்சித் தொண்டர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சில நாட்கள் இழுபறி நீடித்தது. இந்த நிலைமை இசக்கியப்பனை மிகவும் மனவேதனை அடையச் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மே 9ஆம் தேதி அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த இசக்கியப்பன், முதலில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் வாழ்ந்த கட்சித் தொண்டர் இசக்கியப்பன் உயிரிழந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN