சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லக்ஷ்மணனை தகுதி நீக்கம் செய்ய ஆளுநரிடம் மனு
சேலம், 12 மே (ஹி.ச.) சேலம் மேற்கு தொகுதியில் லக்ஷ்மணன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவரை தகுதி நீக்கம் செய்ய கோரி தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக சார்பில் போட்டியிட்ட லக்ஷ்மணன் 1,20,407 வாக்குகள் பெற
லக்ஷ்மணன்


சேலம், 12 மே (ஹி.ச.)

சேலம் மேற்கு தொகுதியில் லக்ஷ்மணன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவரை தகுதி நீக்கம் செய்ய கோரி தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக சார்பில் போட்டியிட்ட லக்ஷ்மணன் 1,20,407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், சேலத்தை சேர்ந்த மனோகர் என்பவர் தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ள மனுவில், லக்ஷ்மணன் தனது தேர்தல் வேட்புமனுவில் குற்ற வழக்குகள் தொடர்பான முக்கிய தகவல்களை மறைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த மனுவில், பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய போது கட்டப்பஞ்சாயத்து நடத்தி ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், லக்ஷ்மணன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், லஞ்சம் பெற்றது மற்றும் பணியிழந்தது தொடர்பான விவரங்களை தேர்தல் வேட்புமனுவில் வெளியிடாமல் மறைத்து வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு முரணானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் லக்ஷ்மணன் மீது நடவடிக்கை எடுத்து, அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam