717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சென்னை, 12 மே (ஹி.ச.) வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகாமையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொ
பெ.சண்முகம்


சென்னை, 12 மே (ஹி.ச.)

வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகாமையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மாநிலம் முழுவதும் 4765 மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருவதாகவும், அவற்றில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இயங்கி வந்த 717 கடைகள் அடையாளம் காணப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள் மூட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு டாஸ்மாக் கடைகளுக்கு இணையாக “எப்.எல்.2” உரிமம் பெற்று “மனமகிழ் மன்றங்கள்” என்ற பெயரில் தனியார் மதுபானக் கடைகளும் இயங்கி வருவதாகவும், அவற்றில் சுமார் 100 கடைகள் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகாமையில் செயல்பட்டு வருவதாகவும் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தனியார் மதுக்கடைகள், அரசு வெளியிட்டுள்ள மூடப்படும் கடைகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும், எனவே “மனமகிழ் மன்றங்கள்” என்ற பெயரில் இயங்கும் தனியார் மதுபானக் கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் இதர டாஸ்மாக் கடைகளையும் கட்டாயம் மூட அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், தற்போது மூடப்படவுள்ள 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 2500 ஊழியர்களுக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப அரசின் பிற துறைகளில் நிரந்தர மாற்றுப்பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P