தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல் நடவடிக்கை- அரக்கோணம், மதுராந்தகத்தில் பொதுமக்கள் வரவேற்பு
அரக்கோணம், 12 மே (ஹி.ச.) தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டருக்குள் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அதிரடி உத்தரவை தொடர்ந்து பல்வேறு மாவட்டங
டாஸ்மாக்


அரக்கோணம், 12 மே (ஹி.ச.)

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டருக்குள் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அதிரடி உத்தரவை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த இரண்டு அரசு மதுபான கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக நீண்டகாலமாக இந்த கடைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அரசின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள மேலும் இரண்டு டாஸ்மாக் கடைகளும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறி, அவற்றையும் நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் டாஸ்மாக் கடைகள் மீதான கட்டுப்பாடுகள் முக்கியமானதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலும் பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த இரண்டு அரசு மதுபான கடைகள் இன்று மூடப்பட்டன.

தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மதுராந்தகம், வாலாஜாபாத் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் மொத்தம் நான்கு கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்னும் மூன்று கடைகளை மூட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் ஏழு கடைகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால், பல பகுதிகளில் மதுபான கடைகளை தேடி மது பிரியர்கள் அலை மோதும் நிலையும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam