Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது,
இரு முக்கிய கட்சிகளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் சேர்ந்து என்னை முதலமைச்சராக ஆக்க முயற்சி செய்ததாக தகவல் வந்தது உண்மைதான்.
ஆனால் அதற்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மதுவுக்கு எதிராக மாநாடு நடத்தி முடித்த நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம் என்றார்.
தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்றும், தேர்தல் காலத்தில் கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் தற்போது அவர் எடுத்துள்ள அணுகுமுறை மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டினார்.
மதச்சார்பற்ற சக்திகளோடு இணைந்து ஆட்சி அமைக்க விரும்புகிறோம் என்று வெளிப்படையாக கூறி, எங்களைப் போன்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது விஜயின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது.
அதிமுக தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
அதிமுக சிதறாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
அது உட்கட்சி விவகாரம்; அதற்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
தவெக அரசில் இணையாதது குறித்து விளக்கமளித்த அவர்,
எங்கள் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தவெக அமைச்சரவையில் பங்கேற்பதா இல்லையா என்பது மட்டுமே விவாதிக்கப்பட்டது. வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது விளிம்புநிலை மக்களின் எதிர்பார்ப்பை புறக்கணிப்பதாக ஆகிவிடும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது என்றார்.
மேலும், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை இன்னும் மாறவில்லை.
ஆனால் உடனடியாக அமைச்சரவையில் சேர்வது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது போல தோன்றும் என்பதால் தொடர்ந்து ஆலோசனை நடந்தது என்றும் கூறினார்.
திமுக காரணமாக தாமதமான முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு,
பத்தாண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம்.
அவர்களின் கருத்தை உடனடியாக புறந்தள்ள முடியாது. குடியரசு ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே வேறு முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இறுதியாக, வெறும் பதவி, அதிகாரம் என்பதற்காக முடிவெடுக்க முடியாது.
எங்களது எதிர்கால அரசியலையும் கணக்கில் கொண்டு தான் ஆதரவு குறித்து முடிவு செய்தோம் என்று திருமாவளவன் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam