திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தில் முறையீடு
திருப்பத்தூர், 12 மே (ஹி.ச.) திருப்பத்தூர் தொகுதி சீனிவாசன் சேதுபதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த மனு, தலைமை நீ
சீனிவாச சேதுபதி


திருப்பத்தூர், 12 மே (ஹி.ச.)

திருப்பத்தூர் தொகுதி சீனிவாசன் சேதுபதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு அவசரமாக எடுத்துக்கூறப்பட்டது. சீனிவாச சேதுபதி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முறையீடு செய்தார்.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் பெற்ற 83,364 வாக்குகளை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஒரு தபால் வாக்கு தவறான தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும், அது கணக்கில் எடுத்திருந்தால் தேர்தல் முடிவு மாறியிருக்கும் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விக்டோரியா கவுரி மற்றும் செந்தில்குமார் அமர்வு, இடைக்கால உத்தரவாக சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் முக்கிய வாக்கெடுப்புகளில் பங்கேற்க கூடாது எனத் தடை விதித்தது.

இந்த உத்தரவால் தனது தொகுதி மக்களின் ஜனநாயக பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படுவதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட முடியாது என்றும் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாத வகையில் விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக சட்டப்பேரவையில் தனது கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam