Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று (12-05-26) தொடங்கியது. இந்த கூட்டத்தின் போது போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
அப்போது சட்டமன்ற மரபுபடி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், பேரவை முன்னவர் செங்கோட்டையனும் அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
அதனை தொடர்ந்து புதிதாக பதவியேற்ற ஜே.சி.டி.பிரபாகருக்கு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் வாழ்த்துரை அளித்தனர். அதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு சமமான உரிமை வழங்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,
என்னை இரண்டாவது முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் தலைவர் தலைமையிலான திமுக கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்துக்கு 82 ஆயிரத்து 782 வாக்குகளை தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன்.
சட்டமன்றத்தில் நாம் அனைவரும் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டோம். அதன் பின்பு இன்று முதல் நடவடிக்கையாக பேரவைத் தலைவரை தேர்ந்தெடுத்திருக்கிறோம். பேரவைத் தலைவர் எப்போதும் சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் எல்லோரிடமும் மிகுந்த அன்போடு பழகக்கூடியவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதே சட்டப்பேரவையில் 1980ஆம் ஆண்டு தேர்தலிலும், 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் நீங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த எம்.எல்.ஏவாக பணியாற்றிருக்கிறீர்கள். எனவே பேரவையினுடைய மரபுகளும், விதிகளும் உங்களுக்கு புதிது கிடையாது.
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 முறையும் ஆளுங்கட்சி உறுப்பினராக சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறீர்கள். இந்த முறை எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து செயல்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எங்கள் அனைவருடைய எதிர்பார்ப்பு.
முதல்வர் நேற்று எங்கள் தலைவர் வீட்டுக்கும் அனைத்து கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துகள் பெற்று போனார். அந்த அரசியல் நாகரிகம் இந்த பேரவையிலும் தொடர வேண்டும். திமுக இந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் செயல்படும். திமுக எப்போதுமே ஒரு ஆக்க சக்தி தான்.
இந்தியாவிலேயே பண்பாட்டு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு சிறப்பாக முன்னேறி இருக்கிறது என்றால் இந்த பேரவையில் நடந்த விவாதங்கள், முடிவுகள், ஏற்றப்பட்ட சட்டங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் காரணம். அப்படிபட்ட இந்த பேரவையில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடம் கொடுத்து ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுநிலைமையோடு செயல்பட வேண்டும்.
இந்த புதிய அரசு அனைவருக்குமான அரசாக உங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் அரசாக செயல்பட வேண்டும். பேரவைத் தலைவரும், முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற நானும் ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் தான்.
ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும் அரசாங்கத்தை நடத்துவதில் திமுக தான் சீனியர் பேட்ச்.
1967லேயே ஆட்சிக்கு வந்தது திமுக தான், அதனால் நாங்கள் தான் சீனியர். அந்த அடிப்படையில் எங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர ரெடியாக இருக்கோம்.
அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள். ஏனென்றால் நமக்கு தமிழ்நாட்டின் நலன் தான் மிக மிக முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b