Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
அதிமுகவில் உருவாகியுள்ள உள்கட்சிப் பிரச்சினை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு தொடர்பாக, கட்சித் தாவல் தடை சட்டத்தை சுட்டிக்காட்டி அதிமுக சட்டத்துறை அணி செயலாளர் இன்பதுரை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்றக் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற முக்கியமான சூழ்நிலைகளில், கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ அல்லது நடுநிலையாக இருந்தாலோ அது கட்சித் தாவலாகவே கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்று கூறுவதாலோ அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது என்றும், அது சட்டப்படி செல்லுபடியாகாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சிவ சேனா தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
அந்த தீர்ப்பில், ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை தான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது என்று தெளிவாக கூறப்பட்டதாக அவர் விளக்கியுள்ளார்.
அதேபோல், “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறுபட்டவை என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணை அரசியல் கட்சியைத்தான் அங்கீகரிக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையான எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள அதிகாரப்பூர்வ கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவே சட்டபூர்வமானது என்று இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.
எனவே, அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்களின் எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே தற்போதைய சட்ட நிலை என அவர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P