டி.டி.டி. இணையதளத்தில் மோசடி - திருமலை திருப்பதி டிக்கெட் முன்பதிவு செய்து ரூ.3 ஆயிரம் கூடுதல் வசூல்!
திருப்பதி, 13 மே (ஹி.ச.) திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி.) ஸ்ரீவாரி தரிசன டிக்கெட் முன்பதிவில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய முறைகேடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில டிராவல் ஏஜென்டுகள் மற்றும் தனியார் நெட் சென்டர்கள், சாப்ட்வேர் தில்லுமு
A


திருப்பதி, 13 மே (ஹி.ச.)

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி.) ஸ்ரீவாரி தரிசன டிக்கெட் முன்பதிவில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய முறைகேடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில டிராவல் ஏஜென்டுகள் மற்றும் தனியார் நெட் சென்டர்கள், சாப்ட்வேர் தில்லுமுல்லுகளை பயன்படுத்தி டி.டி.டி. அதிகாரப்பூர்வ இணையதளத்தை கைப்பற்றி, பொதுப் பக்தர்களை விட வேகமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.3 ஆயிரம் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து டி.டி.டி. விழிப்புணர்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்காக டி.டி.டி. தினமும் 800 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வெளியிட்டு வருகிறது.

ஆனால் சில தனியார் நெட் சென்டர்கள் மற்றும் டிராவல் ஏஜென்டுகள், இணையதளத்தில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆட்டோ பில்லிங் மற்றும் மூன்றாம் தரப்பு சாப்ட்வேர்களை பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ இணையதளம் முழுமையாக திறக்கப்படுவதற்கு முன்பே தகவல்களை சர்வருக்கு அனுப்பி டிக்கெட்டுகளை வேகமாக முன்பதிவு செய்து வந்ததாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், பக்தர்களின் ஆதார் விவரங்களை முன்கூட்டியே சேகரித்து சாப்ட்வேரில் பதிவு செய்து வைத்ததால், சாதாரண பக்தர்களை விட மிக வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தினமும் 400 முதல் 500 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்பட்டு, முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.10 ஆயிரத்து 500 மதிப்புள்ள ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் ரூ.13 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையை சேர்ந்த “பத்மாவதி டிராவல்ஸ்” நிறுவனம் ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக வந்த புகாரின் பேரில், டி.டி.டி. விழிப்புணர்வு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து அதிக அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளனவா?, ஒரே மொபைல் எண்ணில் பல பரிவர்த்தனைகள் நடந்துள்ளனவா?, பக்தர்களின் ஆதார் விவரங்கள் தனியார் நபர்களிடம் எப்படி சென்றது?, இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? அல்லது உள்ளக ஊழியர்கள் யாராவது உதவி செய்தார்களா? என்ற கோணங்களில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA