தமிழக உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்
சென்னை, 13 மே (ஹி.ச.) உளவுத்துறை ஐஜியாக தேர்தல் ஆணையம் நியமித்திருந்த அவினாஷ் குமாரை மாற்றி, தமிழகத்தின் புதிய உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு, சாதி மோதல் தடுப்பு மற்றும் தேர்த
Asra


சென்னை, 13 மே (ஹி.ச.)

உளவுத்துறை ஐஜியாக தேர்தல் ஆணையம் நியமித்திருந்த அவினாஷ் குமாரை மாற்றி, தமிழகத்தின் புதிய உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு, சாதி மோதல் தடுப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் திறமையாக செயல்பட்ட அதிகாரியாக அறியப்படும் அஸ்ரா கார்க்கிற்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்த அஸ்ரா கார்க், அங்குள்ள பள்ளிகளில் கல்வி பயின்று பின்னர் தாபர் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார்.

பேராசிரியர்களாக பணியாற்றிய பெற்றோரின் மகளான அவர், 2004ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வாகி தமிழ்நாடு கேடரில் நியமிக்கப்பட்டார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது காவல் பணியை தொடங்கிய அவர், பின்னர் 2008ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். அப்போது கந்துவட்டி கும்பல்களுக்கு எதிராக தனிப்படை அமைத்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பொதுமக்களிடையே கவனம் பெற்றார்.

மேலும், சாதி மோதல்கள் ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு அமைதியை நிலைநிறுத்தியதற்கும் பாராட்டு பெற்றார்.

அதன்பிறகு மதுரை மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய அவர், தேர்தல் காலங்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் பாராட்டையும் பெற்றார். உத்தபுரம் பகுதியில் நீண்டகாலமாக நீடித்து வந்த இரு சமூகத்தினருக்கிடையேயான மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டதோடு, தலித் மக்களின் கோவில் நுழைவிற்கும் நடவடிக்கை எடுத்தார்.

தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிய காலத்தில் இரட்டை குவளை முறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததுடன், சிறுநீரக மோசடி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து கவனம் ஈர்த்தார். தேனி மாவட்டத்தில் பணியாற்றியபோது, எச்ஐவி பாதிப்பு உள்ள நபருடன் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவமும் பேசப்பட்டது.

பின்னர் மத்திய அரசு பணிக்கு சென்ற அஸ்ரா கார்க், சிபிஐயில் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய அவர், 2022ஆம் ஆண்டு தெற்கு மண்டல ஐஜியாகவும், பின்னர் சென்னை தெற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராகவும் செயல்பட்டார்.

2024ஆம் ஆண்டு வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்ட அவர், தற்போது தமிழ்நாட்டின் உளவுத்துறை ஐஜியாக பொறுப்பேற்றுள்ளார்.

சாதி மோதல் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் அனுபவம் மிக்க அதிகாரியாக கருதப்படும் அஸ்ரா கார்க்கின் இந்த நியமனம் காவல்துறையில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ