விஜய்யின் தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
சென்னை, 13 மே (ஹி.ச.) நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதனால் தனிப்பெரும் கட்சி என்ற பெயரை பெற்றாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், தவெக தலைவர் வி
CM Joseph Vijay


சென்னை, 13 மே (ஹி.ச.)

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இதனால் தனிப்பெரும் கட்சி என்ற பெயரை பெற்றாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் மனு அளித்தபோது, பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் கால அவகாசம் கோரியிருந்தார்.

ஆனால் ஆளுநர் அர்லேகரோ பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே ஆட்சியமைக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், தற்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்திருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த ஞாயிற்றுக்கிழமை

(மே 10) ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (மே 11) 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது.

அதில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

நேற்று இரண்டாவது நாள் கூட்டத்தொடரில், சபாநாயகர், துணை சபாநாயகர் நியமனம் செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.

இதனை முன்னிட்டு நேற்று

(மே 12) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த கூட்டத்தில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி மோதல் காரணமாக அணியானது இரண்டாக பிளவுபட்டிருக்கிறது.

முதல் நாள் சட்டமன்ற கூட்டத்திற்கு ஈபிஎஸ் தலைமையிலான அணி தனியாகவும், எஸ்.பி வேலுமணி தலைமையிலான அணி தனியாகவும் வந்திருந்த நிலையில் சி.வி சண்முகம் மட்டும் தனித்து வந்ததோடு, எம்.எல்.ஏ பதவி பிரமாணம் ஏற்காமல் பாதியிலேயே சென்று விட்டார்.

இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது கடும் அதிருப்தி நிலவி வருவதாக தகவல்கள் கசிந்தன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான 24 அதிமுக எம்.எல்.ஏக்கள் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியானது இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

அதேபோல் திமுகவும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினரும் இன்றைய கூட்டத்தொடருக்கு செல்லாமல் புறக்கணிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு கட்சி எம்.எல்.ஏக்களும் புறக்கணித்தாலும் தவெக அரசு சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்பதால், இன்று சட்டப்பேரவையில் யார் யாரெல்லாம் ஆதரவு அளிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN