Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த ஆறு மீனவர்கள் 12.05.2026 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வின் மீது தங்களது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ. ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் 10.05.2026 அன்று நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்களை சர்வதேச எல்லையை கடந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.
எனவே இப்பிரச்சனை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b