பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் சமாதி கட்டப்படவிருக்கிறது - சிபிஎம் சண்முகம்
சென்னை, 13 மே (ஹி.ச.) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய ‘VB G RAM G’ திட்டம் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. எதிர்க்கட்சிகளி
CPM Shanmugam.


சென்னை, 13 மே (ஹி.ச.)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய ‘VB G RAM G’ திட்டம் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி கடந்த ஆண்டே இதற்கான சட்டவடிவத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்த நிலையில், தற்போது திட்டவட்டமான அமல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது கிராமப்புற மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பெ.சண்முகம் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் சமாதி கட்டப்படவிருக்கிறது. ஏற்கனவே, இத்திட்டம் அமலில் இருந்த காலங்களில் ஆட்சியாளர்களால் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இது செயல்பாட்டில் இருந்தது.

2025-2026 ஆம் நிதி ஆண்டில் 0.22 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது. திட்டப் பயனாளிகளான அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால், ஏழைகளுக்குச் சாதகமான சட்டத்தை ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் அமல்படுத்துவதில் எப்போதுமே அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பது நாம் அறிந்ததே!

ஜூலை 1 முதல் வி.பி.ஜி.ராம்ஜி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. ஆனால், இதை அமல்படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்ற பெரும் நிதிச் சுமையை மாநிலங்களின் மீது ஒன்றிய அரசு சுமத்தியுள்ளது.

எந்தெந்த மாநில அரசுகள் இதை அமல்படுத்தும் என்பது அப்போதுதான் தெரிய வரும். ஒன்றிய பாஜக அரசின் கிராமப்புற மக்களுக்கு எதிரான மிகக் கொடூரமான நடவடிக்கை இது என்பது மட்டும் 100% உண்மை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b