Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக அவரது ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் நியமிக்கப்பட்டார்.
தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் ஒரு ஜோதிடருக்கு முக்கிய அரசுப் பதவி கொடுத்திருப்பது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப்பதவி வழங்கிய உத்தரவை தவெக அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விமர்சனங்களை கருத்தில் கொள்ளும் அரசின் ஜனநாயக பண்புக்கு பாராட்டு
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு சிறப்பு அரசியல் அலுவலராக திரு ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். ஜோதிட சாஸ்திரத்தை தொழிலாக கொண்ட ஒருவரை அரசின் அதிகார மையத்தில் அரசியல் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற பண்புக்கு மாறானது.
அறிவியல் கருத்துக்களையும், கண்ணோட்டத்தையும் வளர்க்க வேண்டும் எனில் அவரது பணி நியமனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இவைகளை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது.
விமர்சனங்களுக்கு காது கொடுத்து, உரிய நடவடிக்கை எடுத்துள்ள அரசின் ஜனநாயக பண்புக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டுதல்களை தெரிவிப்பதுடன், இந்த ஆரோக்கியமான அணுகுமுறை தொடர்ந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b