Enter your Email Address to subscribe to our newsletters

ஆமதாபாத், 13 மே (ஹி.ச.)
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்ற 56-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி தொடக்கம் முதலே தடுமாறியது.
கேப்டன் சுப்மன் கில் 5 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து நிஷான் சிந்து 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனால் குஜராத் அணி சிக்கலில் சிக்கிய நிலையில், சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்து பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத் அணியின் தரப்பில் பிரபுல் மற்றும் ஷகிப் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அபிஷேக் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த இஷான் கிஷன் 11 ரன்கள், ரவிச்சந்திரன் 9 ரன்கள், சலில் அரோரா 16 ரன்கள், ஹென்ரிக் கிளாசன் 14 ரன்கள், நிதிஷ் குமார் ரெட்டி 2 ரன்கள், ஷிவாங் குமார் 4 ரன்கள் மற்றும் பேட் கம்மின்ஸ் 19 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஐதராபாத் அணி 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களுக்கு சுருண்டது.
குஜராத் அணியின் சார்பில் ககிசோ ரபடா மற்றும் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
மேலும் முகமது சிராஜ் மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி முக்கிய வெற்றியை பதிவு செய்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA