Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளை, மே 14 அன்று, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மே 15 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லும் முன் வானிலை நிலவரத்தை அறிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Hindusthan Samachar / vidya.b