Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 மே (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அதனை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப, தி.மு.க. உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான பிரேமலதா விஜயகாந்த், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்ற அடிப்படையில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும், அவர்களின் நிலைப்பாட்டை தி.மு.க. மதிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்த அவர்,
க்ளீன் பாலிட்டிக்ஸ் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது டர்ட்டி பாலிட்டிக்ஸ் செய்கிறார்கள்.
பிளவுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அரசை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், உங்களுடைய தொடக்கமே இப்படியிருக்கும்போது முடிவு எப்படி இருக்கும் என மக்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளவுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு என்ன ரிட்டர்ன் கிப்ட் கொடுக்கப் போகிறீர்கள் என்பதையும் மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தனது கொள்கையில் உறுதியாக இருந்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ