எம்.எல்.ஏக்களை எல்லாம் கடன் பெற்று ஆட்சி நடத்துகின்ற முதல்வர் விஜய் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
சென்னை, 13 மே (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த முதல்வர் விஜயின் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தம
எம்.எல்.ஏக்களை எல்லாம் கடன் பெற்று ஆட்சி நடத்துகின்ற முதல்வர் விஜய் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்


சென்னை, 13 மே (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த முதல்வர் விஜயின் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று (13-05-26) காலை 9:30 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார்.

அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பினர் தரப்பில் விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது,

காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், தவெக அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு ஆதரவு அளிப்பதாகப் பேசினர்.

இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு நாளும் நடந்தவற்றை சில விமர்சனங்களை வைக்க விரும்புகிறேன்.

தவெக ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 4 கோடியே 93 லட்சத்து 25 வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

தற்போதைய ஆளுங்கட்சிக்கு 1 கோடியே 72 லட்சத்து 22 ஆயிரம் தான். மீதமுள்ள சுமார் 3 கோடியே 21 லட்சம் பேரும் இந்த கட்சிக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 65 சதவீத மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியின் மேல் எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

நமது சட்டமன்றம் 234 உறுப்பினர்களை கொண்டது. 118 இடங்கள் கொண்ட ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ தான் ஆட்சிக்கு வர முடியும்.

நம்பிக்கை கோருகின்ற அந்த கட்சிக்கு அந்த எண் இல்லை, 108 இடங்கள் தான் இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர், வெற்றி குறித்த நம்பிக்கை இல்லாததால் இரண்டு இடங்களில் போட்டியிட்டு அதில் ஒரு இடத்தை ராஜினாமா செய்துவிட்டார்.

இன்னும் அந்த தொகுதி மக்களை சந்தித்தோ அல்லது ஒரு அறிக்கையின் மூலமாக ஒரு நன்றியை கூட தெரிவிக்கவில்லை.

நேற்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

அதனால் ஆளுங்கட்சிக்கு 106 இடங்கள் தான் இருக்கிறது. ஆனாலும் தேர்தலில் தனக்கு எதிராக எங்கள் தலைவர் அமைத்த கட்சிகளை எல்லாம் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு பெரும்பான்மைக்கான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து இந்த ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

குடியரசு தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் விசிக, ஐயூஎம்எல், விசிக, சிபிஐ, சிபிஎம் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று தெளிவாக சொல்லிருக்கிறார்கள்.

மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றும் சொன்னார்கள். ஆனால், கொள்கை எதிரி என்று சொன்ன பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியின் ஒரு சட்டமன்ற உறுப்பினரை அந்த கட்சி தலைவருக்கே தெரியாமல் இந்த ஆட்சிக்கு ஆதரவு தர வைத்திருந்தீர்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடியே குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று அந்த கட்சி தலைவர் சொன்னார்.

அதே என்.டி.ஏ கூட்டணியின் பெரிய கட்சியான அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருக்கிறது. பிளவுப்பட்ட ஒரு அணி உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பிளவுப்பட்ட ஒரு அணியின் தலைவருக்கு ஒரு புது ஷோபா போகுது. அந்த ஷோபா போன பின்னாடியே முதல்வரும் போகிறார். தேர்தல் நேரத்தில் ஊழல் சக்தி என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு சோஷியல் மீடியாவில் உங்களை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படி கூவத்தூரை மிஞ்சும் அளவுக்கு நீங்கள் அடிக்கிற கூத்தை பார்க்கும் போது இந்த அரசு எத்தனை நாள் நீடிக்கப் போகிறது என்று மக்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்திருக்கிறது. இப்படி எம்.எல்.ஏக்களை எல்லாம் கடன் பெற்று ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர், தான் அளித்துள்ள போலி வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தவுடன் எங்கள் அரசு வளர்ச்சிக்காக பெற்ற கடன் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

பெரும்பான்மையும் இல்லாத, அடிப்படை அரசியல் நேர்மையும் இல்லாத இந்த அரசு நல்லாட்சி தரும் என்று மக்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்கிறோம். நாங்கள் வெளிநடப்பு செய்தாலும், நீங்கள் வெற்றி பெற தான் போகிறீர்கள். அதன் பிறகாவது மக்களுடைய நம்பிக்கையை காப்பாற்றுகிற மாதிரி உழையுங்கள்.

மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். அந்த திட்டங்களில் எல்லாம் கை வைக்காமல் இதில் அரசியல் செய்யாதீர்கள். நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிய பிறகு தான் ஆட்சியை விட்டு போயிருக்கிறோம். உங்கள் ஆட்சியைப் பொறுத்தவரைக்கு வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b