நீலகிரியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் தொடக்கம்
நீலகிரி, 13 மே (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் நடைபெறும் கோடை விழாவைக் காண சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும் . இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடை
Rose Exhibition in the Nilgiris Begins Tomorrow


நீலகிரி, 13 மே (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் நடைபெறும் கோடை விழாவைக் காண சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும் .

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால், கோடை விழா தள்ளிப்போனது. தற்போது, தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அரங்கில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், முதல்கட்டமாக ரோஜா கண்காட்சியை நாளை (மே 14-ம் தேதி) முதல் 18-ம் தேதி வரை 5 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி நடத்துவதற்கான தேதிகள் இறுதி செய்யப்படவில்லை.

ஊட்டி ரோஜா பூங்காவில் ஏற்கெனவே 4,000 ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, பூங்காவில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்டு, உரமிடப்பட்டு, ரோஜாக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவில் பூத்துள்ள ரோஜா மலர்களை கண்டு ரசித்துச் செல்கின்றனர். கடந்த ஆண்டு 3 நாட்கள் நடைபெற்ற ரோஜா கண்காட்சியை சுமார் 35 ஆயிரம் பேர் பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இக்கண்காட்சியில் லட்சக்கணக்கான ரோஜா மலர்களைக் கொண்டு விலங்குகள், பறவைகள், மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் கலைநயமிக்க பிரமாண்ட வடிவங்கள் (Floral Sculptures) உருவாக்கப்படும்.

பச்சை ரோஜா (Green Rose), கறுப்பு ரோஜா போன்ற உலகம் முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய மற்றும் கலப்பின ரோஜாக்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும்.

பல வண்ண ரோஜா இதழ்களைக் கொண்டு தரையில் வரையப்படும் பெரிய மற்றும் அழகான ரங்கோலி கோலங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b