Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 13 மே (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (51) என்பவர், அதிக லாபத்திற்காகப் புகையிலை பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 9 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதப் புகையிலை விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b