Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
இதையொட்டி முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்வைக்க உள்ளது.
அரசு சார்பில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தை ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் முன்மொழிகிறார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றுகிறார். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கருத்து தெரிவிக்க உள்ளனர்.
அதன்பிறகு தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினால், அதற்கான உத்தரவை சபாநாயகர் வழங்குவார்.
அதன்படி அவைக்கு வெளியே இருக்கும் எம்.எல்.ஏ.க்களை உள்ளே வரவழைக்கும் வகையில் மணி 3 முறை ஒலிக்கப்படும். பின்னர் அவையின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும். தொடர்ந்து சட்டசபை செயலாளர் தலைமையில் டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
சட்டசபையின் 6 டிவிஷன்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தீர்மானத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலையோர் என தனித்தனியாக எழுந்து நிற்குமாறு கூறி வாக்குகள் கணக்கிடப்படும்.
அதன் விவரங்கள் சபாநாயகரிடம் வழங்கப்படும்.
சட்டசபையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் ஒரு வாக்கு பெற்றால் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்படும்.
அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பின் வெற்றி அல்லது தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார்.
தீர்மானம் வெற்றி பெற்றால் அரசு தொடர்ந்து செயல்படும்.
ஒருவேளை தீர்மானம் தோல்வியடைந்தால், அந்த தகவல் கவர்னருக்கு தெரிவிக்கப்படும். பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதாகக் கருதி அரசு கலைக்கப்படலாம்.
இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை சொகுசு பஸ்சில் சட்டசபைக்கு வந்தனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA