ரயில் நிலைய வாயில், நந்தனார் மடம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிக்கை!
கடலூர், 13 மே (ஹி.ச.) தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தனது முதல் நடவடிக்கையாகப் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூடும் பணியைத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் அர
Tasmac


கடலூர், 13 மே (ஹி.ச.)

தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தனது முதல் நடவடிக்கையாகப் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூடும் பணியைத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 48 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வந்தாலும், மதுவினால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து வருவதால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுத்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முதல்வர் விஜய் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் பள்ளி மற்றும் வழிபாட்டு தளங்கள், பேருந்து நிலையங்களை ஒட்டியுள்ள 717 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவின் எதிரொலியாக, கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலைய வாயிலில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, மூடப்பட்டது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குச் சிதம்பரம் பகுதி பொதுமக்களும், பேருந்து பயணிகளும் பெரும் வரவேற்பு தெரிவிப்பதோடு, தமிழக அரசுக்குத் நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலைய வாயிலில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் குடிப்பிரியர்கள் ரயில் நிலைய பாதையை வாகனத்தால் அடைத்துக்கொண்டு சாலையில் அமர்ந்து மது அருந்துவதால் ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்பட்டு வருவதோடு இந்த கடைக்கு 150 மீ தூரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இதனால் மாணவிகளும் தினந்தோறும் பெரிதும் பாதிப்பு அடைகிறார்கள்.

அதேபோல் ஓமக்குளம் நந்தனார் மடம் போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்குப் பின்புறம் உள்ள மதுக்கடை, சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அருகே உள்ள மதுகடையையும் உடனடியாக அகற்ற தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN