Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 13 மே (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து மே 31-ஆம் தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். காலநிலை மாற்றம் மற்றும் கடினமான மலைப்பாதை காரணமாக மற்ற மாதங்களில் மலையேற்றம் தடை செய்யப்படுகிறது.
அந்த வகையில் தென்கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலையில், இன்று (மே 13) முதல் பக்தர்கள் மலையேறிச் செல்ல தற்காலிகமாக தடை விதித்து அம்மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக மலைப்பாதைகளில் நிலச்சரிவு, வழுக்கும் பாறைகள் மற்றும் திடீர் காட்டாற்று வெள்ளம் போன்ற இயற்கை அபாயங்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பக்தர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மலையேற்றத்தை முழுமையாக நிறுத்துவதாக கோவை வனக்கோட்டம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு நடப்பு ஆண்டில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கையின் ஒரு பகுதியாக மே மாத இறுதிக்கு முன்பாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி யாரும் மலையேற முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. பக்தர்கள் வனத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது வனச்சட்டம் 1882-ன் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை சீரடைந்த பின்னர் வனத்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே மீண்டும் அனுமதி வழங்கப்படும். அதுவரை பக்தர்கள் பூண்டி அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த ஆண்டு மலையேற்றத்தின் போது 9 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, இந்த ஆண்டு வனத்துறை மருத்துவப் பரிசோதனையை கட்டாயமாக்கியது. அதோடு பிளாஸ்டிக் பொருட்கள், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்து, 8 பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்புக் குழுவினரை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியிருந்தது.
வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்தைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனித்து பயணத்தைத் திட்டமிடுமாறு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளியங்கிரி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதும், பக்தர்களின் உயிர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதும் அனைவரின் கடமை என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b