சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 21 நாளில் ரூ.1.62 கோடி காணிக்கை
திருச்சி, 13 மே (ஹி.ச.) திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் கடந்த 21 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை ரூ.1 கோடியே 62 லட்சத்தை கடந்துள்ளது. சக்தி தலங்களில் முக்கிய தலமாக
சமயபுரம் மாரியம்மன்


திருச்சி, 13 மே (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் கடந்த 21 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை ரூ.1 கோடியே 62 லட்சத்தை கடந்துள்ளது.

சக்தி தலங்களில் முக்கிய தலமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 21 நாட்களாக பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் தலைமையில் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.

கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் கோவில் மண்டபத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் ரூ.1 கோடியே 62 லட்சத்து 9 ஆயிரத்து 859 ரொக்கம், 2 கிலோ 367 கிராம் தங்கம், 3 கிலோ 968 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்துள்ளது.

மேலும், 159 அயல் நாட்டு நோட்டுகள் மற்றும் 1045 அயல் நாட்டு நாணயங்களும் உண்டியலில் இருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam