Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 13 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.கன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கமாயன் (46).
இவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை தோட்டத்திற்கு சென்றவர் நேற்று இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.
அப்பொழுது உறவினர்கள் தோட்டத்தில் சென்று பார்த்த போது அவர் அங்கே இல்லை எனவும் வேறு இடங்கள் சென்று பார்த்தும் கிடைக்காத சூழலில் மறுபடியும் தோட்டத்தில் சென்று பார்த்த போது அவர் உடல் காயங்களுடன் இறந்து கிடப்பதை உறவினர்கள் சிந்துபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சூழலில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தங்கமாயனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், இன்று தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்களுடன் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு உசிலம்பட்டி பேரையூர் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி ஷண்முகசுந்தரன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
இதனால் உசிலம்பட்டி- பேரையூர் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN