வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிதாக வந்த ஆசிய சிங்கங்கள்
செங்கல்பட்டு, 13 மே (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அமைந்துள்ள சர்வதேச தரத்திலான வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவனது இந்தியாவின் மிகப் பெரிய பழமையான பூங்காவாகும். இந்த பூங்கா சுமார் 1490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும், இய
Vandalur


செங்கல்பட்டு, 13 மே (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அமைந்துள்ள சர்வதேச தரத்திலான வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவனது இந்தியாவின் மிகப் பெரிய பழமையான பூங்காவாகும். இந்த பூங்கா சுமார் 1490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

மேலும், இயற்கையான சூழலில் நவீன வசதிகளுடன் சுமார் 180 வகையான 2,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் உலாவும் இடமான லயன் சபாரி 25 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பார்வையாளர்கள் சிங்கம் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்பட்ட பிரத்யேக வாகனத்தின் மூலம் சென்று சிங்கம் உலாவதை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த லயன் சபாரியில் செல்ல தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கமாக விலங்குப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், இந்தூர் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த சிங்கங்கள் உயிரியல் பூங்கா மேலாண்மை மற்றும் விலங்கு சுகாதார நெறிமுறைகளின்படி கால்நடை மருத்துவர்கள் மற்றும் விலங்குப் பராமரிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ், நான்கு வாரங்களுக்கு கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும். மேலும், தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார மதிப்பீட்டு நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, பார்வையாளர்கள் பார்ப்பதற்காக விலங்குகள் அவற்றின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஆசிய சிங்கங்களுடன் கூடுதலாக அதே பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தூர் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி எகிப்திய கழுகுகளையும், ஒரு பெண் செங்காட்டு கோழியும் வண்டலூர் ஊரில் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதே போல் வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு நீர்யானை, இரு நெருப்புக்கோழி மற்றும் நான்கு மஞ்சள் அனகோண்டா பாம்புகளை இந்தூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த புதிய விலங்குகளின் வருகை, உயிரியல் பூங்காவின் உயிரின எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மேலும் பார்வையாளர்களுக்கு மேம்பட்ட பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN